மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…\!!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அந்நாட்டு அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஆங் சான் சூகி மீது தேசவிரோதப் பேச்சு உள்பட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆங் சான் சூகி
இந்நிலையில் மனித உரிமை தினமான இன்று ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் நாடு தழுவிய அளவில் அமைதியான முறையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மியான்மர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அதன்படி அந்நாட்டின் அனைத்து நகரங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த போராட்டம் தற்போதைய சூழலில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய யாங்கூன் மாணவர் சங்க செய்தித் தொடர்பாளர் மின்ஹான் ஹெட் , எனினும் மியான்மர் மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி, ராணுவ அதிகாரத்திற்கு எதிராக உளவியல் ரீதியான போரை நடத்தினர் என்றார். இது வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக உரிய காரணமின்றி மூடப்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை என்றும் மியூஸ் நகரத்தை சேர்ந்த கடை விற்பனையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தையொட்டி சகாயிங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து சென்றனர். வீடுகளில் இருந்தவர்களும் கறுப்பு உடை அணிந்து, சிறிய போஸ்டர்களைப் கையில் பிடித்தபடி செல்பி எடுத்துக்கொண்டனர். எங்கள் ஊர் எங்களுக்குச் சொந்தமானது என்றும், புரட்சி மூலம் மனித உரிமையை திரும்பப் பெறுங்கள் என்றும் அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தது.