குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம்: திரிணாமுல் காங்.வாக்குறுதி குறித்து ப.சிதம்பரம் கருத்து…!!
கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கோவாவில் ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மஹூவா மொய்த்ரா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளார். மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மொய்த்ரா அறிவித்துள்ளார். கிரிக லட்சுமி திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், பயனாளிகளுக்கான அட்டைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் சிக்கி தவிக்கும் கோவாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிஸ் வாக்குறுதி குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டள்ள பதிவில் ‘‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியான ஒரு கணிதம் இங்கே உள்ளது. கோவாவில் 3.5 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார், மாதத்திற்கு 175 கோடி ரூபாய் செலவாகும். வருடத்திற்கு சுமார் 2100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.
கோவா மாநிலத்தின் ஒரு சிறிய கணக்கை எடுத்துக் கொண்டால், அம்மாநிலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவில் 23,473 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் உள்ளது.
கடவுள் அருள் புரியட்டும். கோவாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.