ஜனவரியில் ஒமைக்ரான் வேகமாக பரவும் -பிரிட்டன் மக்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு…!!!
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமைக்ரான் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் என்று புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஒமைக்ரான் முந்தியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமைக்ரான் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ரோசன்னா பர்னார்ட் தெரிவித்துள்ளார். முக கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டன. திங்கட்கிழமை முதல், அரசின் மற்றொரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட சாத்தியமான வழிகாட்டுதல்கள் தொடங்குகிறது. அடுத்த வாரம் முதல், பெரும்பாலான இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.