பச்சிளம் குழந்தைகளின் மலச்சிக்கல்! (மருத்துவம்)
ஓ பாப்பா லாலி
வயதாக வயதாகத்தான் மலச்சிக்கல் ஏற்படும் என்று இல்லை. பச்சிளம் குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் அவதி உண்டு. இதற்கு என்ன காரணம்? என்ன தீர்வு?குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் பதிலளிக்கிறார்.‘‘பெருங்குடலின் கடைசிப்பகுதியில் காணப்படுகிற சில நரம்புகள் குடலைச் சுருங்க செய்பவை. சில நரம்புகள் குடலை விரிவடையச் செய்பவை. இந்த இரண்டு நரம்புகளையும் கட்டுப்படுத்துவது Ganglion Cells ஆகும். Ganglion Cells இல்லாதபோது மலம் வயிற்றிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக, குடல் இறுகி அடைப்பு ஏற்படும் நிலைக்கு ஹர்ஷ்ப்ரங் நோய்(Hirschsprung disease) என்று பெயர்.
பச்சிளம்குழந்தைகளின் மலச்சிக்கலுக்குப் பெரும்பாலான காரணமாக இந்த நோய்தான் இருக்கிறது. ஹர்ஷ்ப்ரங்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக வாந்தி வரும். வயிற்றில் உப்புசம் உண்டாகும். பெருங்குடல் பாதிக்கப்படுவதன் காரணமாக வயிற்றில் வீக்கம் ஏற்படலாம். சில நேரங்களில், பெருங்குடல் முழுவதும் நரம்பு இல்லாமலேயும் இருக்கும்.இதை உணர்ந்துகொள்ள சில அறிகுறிகள் உண்டு. குழந்தை பிறந்த முதல் 24 மணி நேரத்துக்குள் மலம் கழிக்க வேண்டும். இதை Meconium என்று குறிப்பிடுவோம். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளாக இருந்தால் 48 மணி நேரத்துக்குள் Meconium வெளியேற வேண்டும்.
அப்படி இல்லாதபட்சத்தில் ஹர்ஷ்பரங் நோய்க்கான அறிகுறியாக அது இருக்கலாம் என்று சந்தேகப்படலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் எந்தவித சிக்கல் இல்லாமல் இயல்பாக மலம் கழிக்கும். பவுடர் பால் குடிக்கும் குழந்தைகள்தான் இதுபோல் மலச்சிக்கலால் அதிகம் அவதிப்படுகிறார்கள்.இந்தப் பிரச்னையை உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் எக்ஸ்-ரே மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். இதன்மூலம் குடலின் எந்தப் பகுதி வீங்கியிருக்கிறது என்பது தெரியும். நிலைமையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்தும் குணப்படுத்தலாம்.’’