ஆந்திரா, சண்டிகருக்கு பரவிய ஒமைக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 35 ஆக உயர்வு…!!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
இந்தியாவுக்குள் இந்த வைரஸ் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இந்த வைரசால் முதன்முதலாக பாதிக்கப்பட்டனர்.
நேற்று வரை 33 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 17 பேர் பாதிக்கப்பட்டனர். ராஜஸ்தான்-9, குஜராத்-3, கர்நாடகா-2, டெல்லி-2 பேருக்கு என இந்த தொற்று ஏற்பட்டு இருந்தது.
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவியது.
இந்தநிலையில் ஒமைக்ரான் வைரஸ் முதன் முறையாக ஆந்திர மாநிலத்துக்குள் பரவி உள்ளது.
அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயதானவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த நபர் அயர்லாந்தில் இருந்து மும்பை வந்த போது அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான நெகட்டிவ் முடிவு வந்தது. விசாகப்பட்டினத்துக்கு கடந்த 27-ந் தேதி திரும்பிய அவருக்கு 2-வது முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கு கொரோனா இருப்பதற்கான பாசிட்டிவ் முடிவு வந்தது. இதை தொடர்ந்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அப்போது அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோப்புப்படம்
வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது மாதிரி ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டது.
இதில் கடந்த 27-ந் தேதி அயர்லாந்தில் இருந்து விசாகப்பட்டினம் திரும்பிய 34 வயதுடைய ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் இல்லை.
பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு அறிகுறி எதுவும் இல்லை. அவருக்கு நேற்று மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. மற்றபடி ஆந்திராவில் ஒமைக்ரான் பாதிப்பு வேறு எங்கும் இல்லை.
இதனால் பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கசவம் அணிதல் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சண்டிகரிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. கடந்த மாதம் 22-ந்தேதி இத்தாலியில் இருந்து சண்டிகர் திரும்பிய 20 வயதுடையவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, டெல்லி, ஆந்திரா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.