வைப்புநிதி காப்பீடு சீர்திருத்த நடவடிக்கை வங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்- பிரதமர் மோடி உறுதி…!!
வங்கி வாடிக்கையாளர்களுக்கான வைப்புத் தொகை காப்பீடு திட்டம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது :
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித்துறையின் பங்கு முக்கியமானது. வங்கிகளின் வளர்ச்சிக்கு வைப்பு நிதி வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பணம் முக்கியமானது. அதனால் நாங்கள் வங்கிகளை பாதுகாத்துள்ளோம். வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் பாதுகாப்பை வழங்கியுள்ளோம். மத்திய அரசு மேற்கொண்ட வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு சீரமைப்பு நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
வங்கிகள், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் போது, டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்படும் பணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 98 சதவீதம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். டெபாசிட்தாரர்கள், பணத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்போது, வங்கிகள் வளர்ச்சி பெறும். சிறிய வங்கிகளின் திறன், அளவு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க செய்யவே, அவை, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.