கேரளாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ் -மாநில சுகாதாரத் துறை தகவல்..!!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் , இந்தியாவுக்குள் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த 2 பேர் இந்த வைரசால் முதன்முதலாக பாதிக்கப்பட்டனர். மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
‘பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது நிலைமை தற்போது சீராக உள்ளது. அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபருடன் பயணம் மேற்கொண்டவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது’ என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 3, ஆயிரத்து 777 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு பட்டியலில் இணைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 865 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 34 பேர் உயிரிழந்துள்ளதாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.