;
Athirady Tamil News

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய விஞ்ஞானிகள் ஆதரவு…!!

0

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், வேகமாக பரவுகிற ஆற்றலைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பைப் பெற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடலாம் என்ற குரல், இங்கே ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமையும், கோவிஷீல்டு தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்தகிறபோது (3-வது டோசாக)அது ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி தொற்றில் இருந்து 70 முதல் 75 சதவீத பாதுகாப்பைத்தருகிறது என்று கூறி உள்ளது. இதுபற்றி இந்திய விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

டாக்டர் சாகித் ஜமீல் (நச்சுயிரியல் நிபுணர்):-

2 டோஸ் தடுப்பூசிக்கு பின்னர் போடுகிற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு பொருள் அளவை கூட்டுகிறது. இது ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகளுடனான தொற்றில் இருந்து பாதுகாப்பை அதிகரிக்கிறது. ஒரே ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் இரண்டாவது டோசை 12-16 வாரங்களுக்கு பதிலாக 8-12 வாரங்களில் போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி பற்றிய கொள்கையை வகுக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் முடிவு எடுக்க வேண்டும்.

இந்தியாவை பொறுத்தமட்டில் கோவிஷீல்டு போட்டவர்கள் கோவேக்சினையும், கோவேக்சின் போட்டவர்கள் கோவிஷீல்டையும் பூஸ்டர் டோசாக பயன்படுத்தலாம். ஜைகோவ் -டி, கோவோவேக்ஸ், கோர்பெவ் ஆக்ஸ்-இ புரோட்டீன் தடுப்பூசிகளையும் பூஸ்டர் டோஸ்களாக பயன்படுத்தலாம்.

டாக்டர் டி.ஜேக்கப் ஜான் (நச்சுயிரியல் நிபுணர்):-

எந்தவொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியுமே நோய் எதிர்ப்பு பொருளை அதிகரிக்கும்.

ஒமைக்ரானின் தெரியாத ஆபத்துகளில் இருந்து முன் எச்சரிக்கையாக இருப்பதில் ஆர்வம் இருந்தால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறந்தது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், இணைநோயுடன் போராடுகிற மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எளிமையான நடவடிக்கை ஆகும்.

குழந்தைகளுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடத்தொடங்க வேண்டும். ஆதாரம் தேடிக்கொண்டிருப்பதை விட முன்கூட்டியே தடுப்பது நல்லது. பாதுகாப்பை தாமதப்படுத்துவதும், பாதுகாப்பை மறுப்பதாகத்தான் அர்த்தம்.

டாக்டர் கிரிதர பாபு (வாழ்க்கை முறை தொற்றுநோயியல் பேராசிரியர்):-

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்துவதில் சான்றுகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், பூஸ்டர் டோஸ்களுக்கு முன்னுரிமை அளிப்பதில், உடல்விளைவுகளின் தரவு முக்கியமானது.

2 முதன்மை டோஸ்களை பெறுவதை விட பூஸ்டர் டோஸ்களுக்கு முன்னுரிமை அளிப்பதின் அவசியத்தை பகுப்பாய்வு செய்வதில், ஆஸ்பத்திரி சேர்க்கைகளில் இருந்தும், இறப்புகளில் இருந்தும் பாதுகாப்பு முக்கியம். வளரும் நாடுகளில் இன்னும் தடுப்பூசியை அடையாதவர்களை சென்றடைவதுதான் முக்கியமாக உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை பொறுத்தமட்டில் மூத்த குடிமக்களுக்கும், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பலனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா (தொற்றுநோய் நிபுணர்):-

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இந்திய சூழலுக்கான முன்னுரிமை அல்ல. ஒமைக்ரான் வைரஸ் எதையும் மாற்றவில்லை. இந்தியா பூஸ்டர் டோஸ் பற்றி முடிவு எடுக்க உள்நாட்டில் தரவுகள், ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

இயன்றவரை வயது வந்த அனைவருக்கும் முதல், இரண்டாவது டோஸ் தடுப்பூசியினை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.