மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அரசுடன் இணைந்து பயணிக்க வேண்டும்!!
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டுமானால், அரசுடன் இணைந்துதான் பயணிக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பாராளுமன்ற உறுப்பினரின் புத்தளம் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய இவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் தமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு 30 வருடங்களுக்கு பின்னர் தெரிவுசெய்யப்பட்ட என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்க்கவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காக மக்கள் தெரிவு செய்யவில்லை.
வீடு, காணி, தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றோடு வீதி, மின்சாரம், கல்வி என பின்னடைந்து காணப்படுகின்ற பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் மக்கள் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
எனவே, எனது மாவட்ட மக்களுடைய எதிர்ப்ப்புக்களை நிறைவேற்றுவது எனது கடமையாகும். மக்களின் எதிர்பார்ப்புக்களை புதைத்து விட்டு கட்சியிலுள்ளவர்களை திருப்திப்படுத்த எனது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை.
எனது கட்சியை விட மக்களின் அபிலாஷைகளே எனக்கு முக்கியம் எனக் கருதி , எனது மாவட்ட மக்களின் அங்கீகாரத்தோடு அரசுக்கு ஆதரவு வழங்கி வருகிறேன்.
அரசுக்கு ஆதரவு உறுப்பினராக செயற்பட்டு வரும் நாள் முதல் புத்தளம் மாவட்டத்தில் இந்த வருடம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.
அடுத்த வருடமும் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன். பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களோடும் பேசியிருக்கிறேன். ஆகவே, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்தால் எனது மாவட்ட மக்களுக்கு என்னால் எந்த அபிவிருத்தி பணிகளையும் செய்ய முடியாது.
ஒரு எதிர்க்கட்சியில் பெயரளவில் உறுப்பினராக இருப்பதை விட, அரசோடு இணைந்து மக்களுக்கு பணியாற்றுவது ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது.
அத்துடன், கட்சியில் இருந்து கொண்டு ஒரு சிலர் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு என்னால் ஒருபோதும் கட்டுப்பட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், உயர்பீட உறுப்பினர் என்ற வகையிலும் என்னிடம் எந்த ஆலோசனைகளும் கேட்கவில்லை. கட்சி என்னை கணக்கிலேயே எடுப்பதில்லை.
என்னை யாரும் விமர்சித்தாலும் அதற்கு நான் ஒருபோதும் சஞ்சலப்படப்போவதில்லை. நான் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் முதல் மாதத்தில் இருந்து எனக்கு கிடைக்கும் கொடுப்பனவு உள்ளிட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கின்ற அத்தனை வரப்பிரசாதங்கள் மூலம் வருகின்ற நிதியை கல்விக்காகவே செலவு செய்து வருகிறேன்.
பாராளுமன்றத்திற்கு செல்வது, உணவு, தொலைபேசி பாவனை , அலுவலகம் என எல்லாத் தேவைளும் எனது சொந்த நிதியிலிருந்துதான் செலவு செய்து வருகிறேன்.
நான் பணத்துக்கு சோரம் போகவில்லை. மாற்றமாக எனது மாவட்ட மக்களின் அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றவே சோரம் போயிருக்கிறேன். எனது பயணம் தூய்மையானது. அது எனது மாவட்ட மக்களுக்கும் நன்கு தெரியும்.
எனவே, பொதுத் தேர்தல் வரும்போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் பர்த்துக்கொள்வார்கள். அதனை அந்த சந்தர்ப்பங்களில் பார்த்துக்கொள்வோம்.