;
Athirady Tamil News

தமிழ் பேசும் கட்சிகளிடம் ஆனந்த சங்கரி விடுத்துள்ள கோரிக்கை!!

0

குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சில கட்சிகள் ஒனறு சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு தமிழ் மக்களுக்கு மேலும் ஆபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை குறிப்பிடட் கட்சிகளின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும் பொழுது வேதனையை தருகினறது.

அந்நிய நாடுகளின் அழுத்தத்தை பிரயோகிக்க சொல்லி கோருவது முட்டாள்த்தனமான செயற்பாடாகும். இதன் மூலம் உள்ளூர் அரசியல் வாதிகளையும் பெரும்பாண்மையின கடும் போக்காளர்களையும் கோபமடைய செய்யும் செயலாகும் அதுமட்டுமல்ல குறிப்பிட்ட நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள புரிந்துணர்வை சிதைக்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும்.

இலங்கை ஒரு இறைமையுள்ள நாடாகும். எந்த ஒரு நாடும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிடுவதை இலங்கையும் விரும்புவதில்லை. குறிப்பிட்ட நாடுகளும் இந்த விடயத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கும்.. இந்த விடயம் அனைத்து தரப்பினருக்கும் தெரிந்திருந்தும் மக்களை முட்டாள்களாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கவிடயமாகும்.

எந்த ஒரு காலகட்டத்திலும் சமஸ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அனைத்துதரப்பினரும் கூறிய பின்பும் ”சமஸ்டியை பெற்றே தீருவோம்” என்று அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய கௌரவ ரணில் விக்கிரமசிங்க சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்டார். அதற்கு எதிராக பிரசச்சாரத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து ஒற்றையாட்சிக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட கௌரவ மகிந்தராஜபக்ஷ அவர்களை வெற்றிபெறச்செய்தனர்.

இருந்தும் 49 சதவீதத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் சமஸ்டிக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரலாற்றுத் தவறை செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று சமஸ்டிக் கோரிக்கையை வைத்து கொக்கரிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. சமஸ்டி பற்றி பேசும் அருகதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது. இவர்களுடன் இணைந்து ஒரு சில கட்சிகள் கூடிப் பேசுவது பெரும் வியப்பாக இருக்கின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை இந்நிய முறையிலான ஒரு அரசியல் தீர்வையே முன்வைத்து வருகின்றது. இதற்கு மேலாக இந்தியாவும் எமக்கு எதையும் பெற்றுத்தரப் போவதில்லை. பெருமளவு சிங்கள மக்களும் அரசியல் தரப்பினரும் ஒரு காலத்தில் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று இலங்கையிடம் சமரசமாக பேசிப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதே சாலச் சிறந்ததாகும்.

2004ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் பலமான விடுதலைப்புலிகள் அமைப்பை வைத்துக்கொண்டு அவர்களால் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 2015ம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகித்துக்கொண்ட நேரத்தில் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதுவித தீர்வினையும் பெற்றுக்கொடுக்க முன்வரவுமில்லை. முயற்சிக்கவுமில்லை. இன்று இவர்களுடன் இணைந்து ஒரு சில கட்சிகள் ஒருமித்து தீர்மானங்களை நிறைவேற்றுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.