;
Athirady Tamil News

பாப்பாவுக்கு வரும் சரும அலர்ஜி!! (மருத்துவம்)

0

‘‘பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஏதேனும் சருமநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று பெயர்’’ என்கிறார் சரும நல மருத்துவர் ருக்மணி.“பெரும்பாலும் மூன்று, நான்கு மாதக் குழந்தைகளுக்கே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. உதிரும்படியாக இல்லாமல் சருமத்தோடு ஒட்டி இருக்கும் இந்தச் செதில்களால் வலி, அரிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு சற்று அருவருப்பான தோற்றத்தை தரும். இது எண்ணெய்ப்பசை சருமத்தில் ஏற்படும் அழற்சியினால் வருகிறது.

இந்தச் செதில் புண்கள் உச்சந்தலையில் மட்டுமல்லாது காதுமடல்கள், கண் இமைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் இருக்கலாம். வயிற்றிலிருக்கும் போதே தாயிடமிருந்து குழந்தைக்குள் செல்லும் ஹார்மோன்களினால் அதிகப்படியான எண்ணெய் சுரப்பின் காரணமாக வருகிறது.சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடக்கூடியது க்ராடில் கேப் என்பதால் இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தையின் தலை முடியை அடிக்கடி மெல்லிய ஷாம்பூ கொண்டு அலசலாம். வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் போன்றவற்றை தடவுவதிலும் தவறில்லை.

இருப்பினும் ஈஸ்ட் தொற்றுகளால் குழந்தையின் முகம் மற்றும் உடல் முழுவதும் ஏற்படுமானால் ஆயின்மென்ட் மற்றும் ஷாம்பூவை பரிந்துரைக்கிறோம். அதேநேரத்தில், தாங்களாகவே மருந்துகடைகளில் ஆயின்மென்ட்களை வாங்கி குழந்தைகளுக்கு தடவுவது தவறு. குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிப்பதே நல்லது” என்கிறார் மருத்துவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.