போட்டியாளர்களின் 3 கேள்விக்கு அசத்தலான பதில் அளித்து மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் சூட்டிய ஹர்னாஸ் கவுர்…!!
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி (மிஸ் வேர்ல்டு), பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் 70-வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரமான எய்லாட் நகரில் நடந்தது.
உலகம் முழுவதிலும் இருந்து 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் கவுர் பங்கேற்றார். கடந்த ஒரு மாதமாக இஸ்ரேலில் இந்த போட்டி நடந்து வந்தது.
பல்வேறு சுற்று போட்டிகளாக மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி நடத்தப்பட்டு அழகிகள் இறுதிச்சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த தொடக்க சுற்று போட்டிகளில் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். நேற்று ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது.
அந்த ஆடை அலங்கார போட்டியிலும் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் ஆதிக்கம் செலுத்தினார். இதன் காரணமாக “டாப்-10” அழகிகள் வரிசையில் ஒருவராக ஹர்னாஸ் கவுர் தேர்வானார். இந்த 10 நாட்டு அழகிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று அதிகாலை இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன.
அதில் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர், பிராகுவே நாட்டை சேர்ந்த 22 வயது இளம் பெண் நதியா பெரிரியா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் லலிலா ஸ்வானே ஆகிய மூன்று அழகிகளும் இறுதிச்சுற்றுக்கு தேர்வானார்கள். இந்த 3 அழகிகளுமே தொடக்க சுற்று போட்டிகளில் மிகச்சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனால் இறுதிச்சுற்றில் இந்த 3 அழகிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதிச்சுற்றில் பிரபஞ்ச அழகியை தேர்வு செய்வதற்கான கடைசி நிகழ்ச்சியாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. 3 அழகிகளிடமும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “இன்றைய இளம் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து வெற்றி பெறுவது எப்படி என்று உங்களிடம் யோசனை கேட்டால் அவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
ஹர்னாஸ் கவுர்
இந்த மூன்று கேள்விகளுக்கும் இந்தியா, பிராகுவே, தென் ஆப்பிரிக்கா நாட்டு அழகிகள் பதில் அளித்தனர். இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் பதில் அளிக்கும் போது, “இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிகப்பெரிய நெருக்கடியாக இருப்பது அவர்கள் தங்களை தாங்களே நம்பாததுதான். தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு இளம் பெண்ணும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்வதை முதலில் இளைஞர்கள் நிறுத்த வேண்டும்.
இன்று உலகம் முழுக்க என்ன நடக்கிறது என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள வேண்டும். நெருக்கடியில் இருந்து வெளியே வந்து உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ளுங்கள்.
ஏனெனில் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் தலைவர். உங்கள் குரல்தான் உங்களுக்கு சொந்தமானது. அதை தைரியமாக வெளிப்படுத்துங்கள். நான் என்னை நம்புகிறேன். அதனால்தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் பதில் அளித்தார்.
ஹர்னாஸ் கவுரின் இந்த பதிலுக்கு அரங்கில் திரண்டு இருந்த அனைத்து போட்டியாளர்கள் உட்பட நடுவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இந்திய அழகியின் பதில் பிராகுவே, தென் ஆப்பிரிக்கா அழகிகளின் பதிலை விட மிகவும் அழகாகவும், ஆத்மார்த்தமாகவும் இருந்ததாக பேசப்பட்டது.
இதையடுத்து 8 நடுவர்களும் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதன் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற முடிவை அறிவித்தனர். மூன்றாவது இடத்தை தென் ஆப்பிரிக்க அழகி லலிலா ஸ்வானே வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் இந்திய அழகிக்கு கிடைக்குமா? பிராகுவே அழகிக்கு கிடைக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ நாட்டு அழகி ஆண்ட்ரியா பட்டத்தை சூட்டி வாழ்த்து தெரிவித்தார். பிராகுவே அழகி நதியா 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பிரபஞ்ச அழகியாகி இருக்கும் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் தொடக்க சுற்று போட்டிகளில் மட்டுமின்றி அறிவுத்திறனை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு இந்த பட்டம் தேடி வந்துள்ளது. அவரது தன்னம்பிக்கை மிகுந்த பதில் அவருக்கு வெற்றியை தேடி கொடுத்திருப்பதாக நடுவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.
மிஸ் யுனிவர்ஸ் உலக பிரபஞ்ச அழகி பட்டத்தை இதுவரை 2 இந்திய பெண்கள் மட்டுமே பெற்று உள்ளனர். 1994-ம் ஆண்டு சுஸ்மிதா சென் இந்த பட்டத்தை வென்று இந்திய பெண்களுக்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்தார்.
அவரை தொடர்ந்து 2000-ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார். அவர்கள் இருவரும் அதன் பிறகு திரை உலகிற்கு வந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது ஹர்னாஸ் கவுர் 3-வது இந்திய பெண்ணாக இந்த பட்டத்தை கைப்பற்றி சிறப்பு சேர்த்து உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் தற்போது அங்குள்ள கல்லூரியில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். 2017-ம் ஆண்டு முதல் அழகி போட்டிகளில் ஹர்னாஸ் கவுர் பங்கேற்று வருகிறார். 17 வயதில் அவர் முதல்முறையாக அழகி பட்டத்தை வென்றார்.
2019-ம் ஆண்டு பஞ்சாப் மாநில அழகியாக தேர்வான அவர் கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வானார். அதன்மூலம் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று தற்போது உலக அழகியாக மாறி இருக்கிறார்.
மாடலிங் செய்து வந்த இவர் சில பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.