கடலட்டை பண்ணையின் போர்வையில் சீனாவின் ஊடுருவல் ( படங்கள் இணைப்பு )
தீவகத்திற்குள் ஊடுருவும் சீனா ! தடுக்குமா இந்தியா ?
சீன அரசு கடலட்டை பண்ணை எனும் போர்வையில் யாழ் குடாநாட்டின் தீவகத்திற்குள் ஊடுருவி தென்னிந்தியாவில் உள்ள அதி முக்கிய ராணுவ தளங்களை கண்காணிக்கவும் , தாக்கி அழிப்பதற்கும் முயற்சிக்கின்றது . இதனை முளையிலே கிள்ளியெறிவதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என்று வினவுகிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை ( தீவகம் ) தொகுதி கிளை செயலாளரும் , வேலணை பிரதேச செயலாளருமான கருணாகரன் நாவலன் .
இந்தியாவின் ராணுவ பயிற்சி தளங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் , இயந்திரங்கள் உள்ளடங்கிய முகாம்கள் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலேயே காணப்படுகின்றன . இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சீனாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் , மிக தொலைவில் அமைந்துள்ள மாநிலமாக தமிழ்நாடு காணப்படுகின்றது . இதன் காரணமாகவே பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இந்திய ராணுவத்தின் பெரும்பாலான ராணுவ தளங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டன . இந்நிலையில் அவற்றினை தாக்கி அழிக்கவோ அல்லது கண்காணிக்கவோ இலங்கையின் யாழ் குடாநாட்டிலுள்ள தீவுப்பகுதிக்குள் ஊடுருவ வேண்டும் . அதனடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக விளங்கிய தருணத்தில் இந்தியாவுக்கு மிக அண்மையில் காணப்படுகின்ற நெடுந்தீவில் சுற்றுலா தளம் அமைக்கும் போர்வையில் சீனா காலூன்ற எண்ணியிருந்த வேளையில் 2015 ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது .
மீளவும் ராஜபக்ச குடும்ப ஆட்சி நிலவுகின்ற இவ்வேளையில் அண்மையில் எரிசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் , காற்றாலை மின் உற்பத்தி நிலையம் எனும் போர்வையில் தீவுப்பகுதியில் ஊடுருவதற்கு சீனா பெருமுயற்சி எடுத்திருந்தது . தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினர் மற்றும் சில பொது அமைப்புக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டத்திலிருந்து சீனா பின்வாங்கியிருந்தது.
ஆனாலும் ஈபிடிபி கட்சி ஊடாக தீவகத்திலுள்ள சில கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை மிரட்டியும் , சலுகைகள் வழங்குவதாக ஏமாற்றியும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் பணிகளை சீனா தீவிரமாக முன்னெடுத்துள்ளது. மேற்படி கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு தீவகத்திலுள்ள பெரும்பாலான மீனவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர் .
இச்சந்தர்ப்பத்தில் கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படுகின்ற சில கடற்தொழிலாளர்களை கவரும் வகையில் வாழ்வாதார உதவித்திட்டங்களை வழங்கி முழுமையாக தம்வசம் இழுப்பதற்காக எதிர்வரும் புதன்கிழமையன்று இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் .
கடலட்டை பண்ணை எனும் போர்வையில் சீனாவின் கடற்படை தளங்கள் தீவுப்பகுதியில் அமைக்கப்படவுள்ளன . இந்நிலை தொடருமாயின் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் கடும்போர் மூளக்கூடும் . இதனால் முற்றாக பாதிக்கப்படப்போவது யாழ் குடாநாட்டின் தீவக மக்களும் இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களுமே என்பதனை நாம் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.