இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை…!!
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அங்கு நிலதட்டுக்கள் அசைவு காரணமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மவுமரேராவில் இருந்து 95 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளோரஸ் தீவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கு அடியில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.அவர்கள் அனைவரும் சாலைகளில் பீதியுடன் நின்று கொண்டிருந்தனர்.
கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.
இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதிகாரிகள் விரைந்து சென்று பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பீதி நிலவிவருகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
ஏற்கனவே இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்து சிதறியதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் நிலவியது.
இதுதொடர்பாக இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் கூறும்போது, ‘இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை’ என்று தெரிவித்தது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.3 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஏற்பட்ட சுனாமி இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.