5 மாநில சட்டசபை தேர்தல்- பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்…!!
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கான பதவி காலம் மே மாதம் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 23-ந்தேதியுடன் முடிவடைகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கான பதவிக்காலம் மார்ச் மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைகிறது.
60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டசபை மற்றும் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் மாதம் இறுதியில் முடிவடைகிறது.
இதையொட்டி இந்த 5 மாநிலங்களிலும் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான பணியினை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திரபாண்டே ஆகியோர் அடுத்த வாரம் கோவா மாநிலத்துக்கும், உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
தேர்தலையொட்டி புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களை விரைவாக வெளியிடுமாறு அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்தை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
வருகிற 1-ந்தேதி வாக்காளர் பட்டியலை வெளியிடப்போவதாக அந்தந்த மாநிலங்கள் தெரிவித்தன. உ.பி.யில் மட்டும் 5-ந் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று உள்ளூர் திருவிழாக்கள், வானிலை நிலை, சட்டம்- ஒழுங்கு நிலை மற்றும் மத்திய படைகள் தேவைகள் குறித்தும், கொரோனா நெறிமுறைகள் குறித்தும் அங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் தேர்தலை 6 முதல் 8 கட்டங்களாக சுமார் ஒரு மாத காலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மார்ச் 15-ந்தேதிக்கு முன்பாக அந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.
5 மாநில தேர்தலையொட்டி ஜனவரி முதல் வாரம் ஓட்டுப்பதிவு அட்டவணை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடமாநில தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.