;
Athirady Tamil News

இன்று குழந்தைகள் தினம் : குழந்தைக்கும் நேரத்தை ஒதுக்குங்க!! (மருத்துவம்)

0

பெற்றோர் குழந்கைளுக்கான உறவு விலைமதிக்க முடியாதது. நல்ல குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கடமை பெற்றோருக்கு உண்டு. இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகள் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது. ‘ஹாய், டாடி’, ‘மம்மி, பைபை’ என்ற அளவில் பேச்சும் உறவும் சுருங்கிவிட்டது. பொருளாதாரரீதியாக குடும்பத்தை சமாளிக்க கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் குழந்தைகளுக்கு.

7 கிலோ புத்தக பையை சுமந்து பள்ளிக்கு சென்று திரும்பும் மழலைகள் வீட்டுக்கு வரும் போது கதவு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து மனதளவில் வாடித்தான் போவார்கள். வீடு வரும் குழந்தைகளை, ‘வா… செல்லம்..’ என்று அன்போடு அழைக்கவும், பள்ளிக்கு சென்று மாலையில் அழைத்து வரவும் கூட பெரும்பாலான வீடுகளில் யாரும் கிடையாது. சீருடைகளை களைந்து உடைமாற்றிய பின்னர் காலையில் அம்மா வைத்துவிட்டுப்போன எதையாவது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் சாப்பிவிட்டு டியூஷனுக்கு புறப்பட்டு சென்றுவிட வேண்டிய நிலைதான் இந்த பிள்ளைகளுக்கு.

இரவு எட்டு மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பும்போது அப்பாவும், அம்மாவும் வந்து சேருவார்கள். இரவு உணவை தயார் செய்வதற்காக தாய் கிச்சனுக்கு சென்றுவிட தந்தையோ மிச்சமுள்ள அலுவலக வேலைகளை பார்க்கவோ சோர்வில் தூங்கவோ தயாராகி விடுவார். பெற்றோர் இருந்தும் தனிமையில் வீழ்கின்றனர் சிறார்கள். அவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் டிவியும், அதன் ரிமோட்டும்தான். அவர்கள் மனம்போன போக்கிற்கு சற்று நேரம் பார்த்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டு தூங்க செல்ல வேண்டியதுதான். பள்ளியில் நடந்த நிகழ்வுகளையோ, நண்பர்களுடனான உரையாடல்களையோ, பாடம் குறித்த சந்தேகத்தையோ தீர்த்து வைக்க வீட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது.

மைதானத்துக்கு சென்று விளையாடுவது அறவே நின்று விட்டது; இந்த நிலையில் தான் தற்போதைய குடும்பங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. எதற்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாத கட்டாயத்தில் பெண்களும் தள்ளப்பட்டுள்ளனர். வார விடுமுறை நாட்களில் குழந்தைகளோடு குதூகலமாக இருப்பது என்பது கூட சில பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும் வார விடுமுறை நாட்களில் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர் நம்முடன் ஒரு நாள் கூட இருக்க மறுக்கிறார்களே என குழந்தைகளுக்கும், நம்மை புரிந்துகொள்ளவில்லையே என குழந்தைகள் மீது பெற்றோருக்கும் அதிருப்தி ஏற்படுகிறது. முடிந்தவரை இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சிக்க வேண்டும். எப்படியாவது ஒரு நாளைக்கு சில நிமிடங்களையாவது குழந்தைகளுடன் பேசுவதற்கு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளின் எண்ணவோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும். பெற்றோர் குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரித்துள்ளதால் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட துவங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களது கவனம் சிதறும் அபாயம் உள்ளது. மேலும் சில வீடுகளில் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு குழந்தைகள் சரியாக மதிப்பளிக்காத நிலையும் உருவாகி வருகிறது. எனவே இந்த காலகட்டத்துக்கு ஏற்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு அமைதியான மனப்பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.