சமூகத்திற்கு நல்லதை சொல்லுங்கள்: திரைப்படத்துறையினருக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்…!!
பாலிவுட் திரைப்பட உலகின் மூத்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான மறைந்த ராஜ் கபூர், இந்திய திரைப்பட உலகிற்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் “ராஜ் கபூர் தி மாஸ்டர் அட் ஒர்க் ” என்ற புத்தகத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் ராகுல் ரவைல் என்பவர் எழுதியுள்ளார்.
ராஜ் கபூரின் 97வது பிறந்த நாளான இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:
ராஜ்கபூர் பற்றி புத்தகம் எழுதியுள்ள ராகுல் ரவைல்
1950 மற்றும் 60 களில் இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய அடையாளத்தையும் திசையையும் ராஜ் கபூர் கொடுத்தார். ஒரு முக்கியமான தயாரிப்பாளராகவும் சிறந்த நடிகராகவும் இந்தி சினிமாவுக்கு அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது.
அவரது திரைப்படங்கள் உண்மையான கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவரது ஆரம்ப கால படங்கள் சார்லி சாப்ளின் தாக்கத்துடன் திகழ்ந்தன. சாப்ளினின் தி டிராம்ப் கதாபாத்திரத்தையும் அவை வெளிப்படுத்தின. அதில் ராஜ் கபூரின் ஆளுமை எளிமையானது, நேர்மையானது. இது அவருக்கு உலக அளவில் புகழ் பெற்றுத் தந்தது.
ராஜ் கபூர் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், காலத்தால் அழியாத மெல்லிசைகளையும் கொண்டவை, அவை இன்றும் பிரபலமாக உள்ளன. மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவில் இந்திய கலாச்சாரத்தை தனது திரைப்படங்கள் மூலம் கொண்டு சென்றவர் ராஜ்கபூர்.
மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் செல்வாக்கு மிக்க கருவி திரைப்படம். சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லும் திரைப்படங்களை எடுக்க வேண்டும். திரைப்படங்கள் மக்கள் மனதில் நேர்மறையான எண்ணத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்க வேண்டும். வன்முறை ஆபாசம் இன்றி சமூக, தார்மீக நெறிமுறையுடன் கூடிய தகவல்களை சொல்லும் திரைப்படங்கள் வெளிவருவதை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.