பூஸ்டர் தடுப்பூசி குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படவில்லை – டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்…!!
கொரோனா தடுப்பூசி 2 தவணை போடப்படும் நிலையில், மூன்றாவதாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ராகேஷ் மல்ஹோத்ரா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விபின் சங்கீ, ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை போன்று நமது நாட்டிலும் செலுத்த வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கடந்த விசாரணையின்போது வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘கொரோனா தடுப்பூசியை தகுதி வாய்ந்த அனைவருக்கும் செலுத்துவதற்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து, தடுப்பு ஊசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு, கொரோனா தடுப்பு ஊசி திட்டத்துக்கான தேசிய நிபுணர் குழு இதுவரை எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கவில்லை. தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பாற்றல் காலம் குறித்து காலப்போக்கில்தான் தெரியவரும்’ என தெரிவித்துள்ளது.