தன்னை காப்பாற்றும்படி பிபின் ராவத் சொன்னார்: அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள்…!!
குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை பார்த்தவுடன் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்பு களத்தில் குதித்தனர். அவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரை கொண்டு போய் ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து மீட்பு பணியும் மேற்கொண்டனர். தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவினர்.
உதவி செய்தபோது ராணுவ வீரர்கள் நிலைமை குறித்து நேரில் பார்த்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிரிந்து வருகிறார்கள். அந்த வகையில் பிபின் ராவத் உயிருக்கு போராடிய நிலையிலேயே, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்புலன்சில் மருத்துவ பணியாளர்களாக இருந்தவர்கள் பிபின் ராவத்தின் கடைசி நேர அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராம மூர்த்தி: ஹெலிகாப்டர் விபத்து நடந்ததாக 12.36-க்கு உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக நான் மருத்துவ பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு 12.40 மணியளில் சென்றடைந்தோம்.
அங்கு ஏற்கனவே, ஆம்புலன்ஸில் சென்றவர்கள் பிபின் ராவத் உடலை நாங்கள் சென்ற வாகனத்திற்கு மாற்றினார்கள். நான் உடனடியாக வாகனத்தை எடுத்து மருத்துவனைக்கு ஓட்டிச் சென்றேன் என்றார்.
விக்னேஷ, அவசரநிலை மருத்துவமனை உதவியாளர்: விபத்து நடத்த இடத்தில் இருந்து பிபின் ராவத் என்றுதான் தெரியாமலேயே ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு எடுத்து வந்தோம். அடுத்த ஒரு நிமிடத்தில் கேப்டன் வருண் அவர்களையும் எடுத்து வந்தார்கள்.
இருவரையும் ஒரே ஆம்புலன்சின் ஏற்றிக் கொண்டு சென்றோம். மருத்துவமனையில் இருவரையும் உயிரோடு சேர்த்தோம். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும்போது, தளபதி இந்தியில் பேசினார். அதனால் தனக்கு சரியாக ஏதும் புரியவில்லை. அருகில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் இந்தியில் ஏதோ கூறினார். தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தன்னை காப்பாற்றும்படி அவர் கூறியதாக எனக்கு புரிந்தது’’ என்றார்.