விடுமுறை கழிக்கும் நேரமல்ல !!
ஜனாதிபதி, எதற்காக வெளிநாடு சென்றாரென தன்னால் கூற தெரியாதுள்ளதாகத் தெரிவித்த, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, அனைவருக்கும் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்று விடுமுறையைக் கழிப்பதற்கான நேரம் இதுவல்ல என்றார்.
நாடு தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, துயரங்களை பகிர்ந்துகொள்ளும் நேரமிது. அப்போது தான் மக்களிடம் நம்பிக்கையை கட்டியெழுப்பலாம். அந்த நம்பிக்கையை கட்டியெழுப்பவதற்காக எமக்கிருக்கும் சந்தர்ப்பத்தை சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்றார்.
குறைந்தது இந்த சமையல் எரிவாயு பிரச்சினைக்கு கூட யார் பொறுப்பென தெரியவில்லை. வேறு நாட்டில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் குறித்த நிறுவனங்களின் பிரதானிகள் கைது செய்யப்பட்டிருப்பர். ஆனால், இங்க எதுவும் தெரியாததைப்போன்று இருக்கின்றனர் என்றார்.
இவ்வாறான நிலையானது நாட்டில் அராஜகத்துக்கான வழியை ஏற்படுத்தும் என தெரிவித்த அவர், இன்று நாட்டை வழிநடத்த அமைச்சரவைக்கு அப்பால்யாரோ உள்ளனர் என்றார்.
நாட்டை வழிநடத்தும் தலைவரிடம் அவரைச் சூழவுள்ள அதிகாரிகள் பல போலி விடயங்களை கூறுகின்றனரென நினைக்கிறேன் என தெரிவித்த அவர், அதனால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினை அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாட வேண்டிய விடயமாகும் என்றார்.
இந்த மாதம் நிறைவடைவதற்குள் அந்நிய செலாவணியை கொண்டு வருகிறோம் என, கூறுகின்றனர். ஆனால், அது ஒருபோதும் நடக்காதென அவர்களுக்கும் தெரியும் கேட்டுக்கொண்டிருக்கும் எமக்கும் தெரியும் என்றார். முறையான பொறிமுறையொன்று இன்மையே அந்நிய செலாவணி எமக்கு கிடைக்காமைக்கான பிரதான காரணமாகும் என்றார்.