77 நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் – WHO கவலை !!
கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் திரிபானது முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒமிக்ரோன் திரிபு பல நாடுகளில் பரவி வருகின்றது, ஆனால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பல நாடுகளில் ஒமிக்ரோன் திரிபின் பரவலைக் குறைத்து மதிப்பிடுவது குறித்து தான் கவலையடைவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒமிக்ரோன் திரிபின் பரவலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்றால் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக உயர்வடைந்து, சுகாதாரத் துறை வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
இதேவேளை, தற்போது 77 நாடுகளில் ஒமிக்ரோன் திரிபு பரவியுள்ளது. ஐரோப்பா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலும் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருகிறன்றதுடன், ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான முதலாவது மரணம் அன்மையில் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மேலும் தெரிவித்துள்ளது.