சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு புதிய சிக்கல்…!!
போக்சோ சட்டம் தொடர்பாக இரண்டு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தரம் செய்யும் முடிவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்ஸோ சட்டத்தின்கீழ் பாலியல் குற்றமாகாது’என நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்தார். அதே போல கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி நடைபெற்ற வழக்கில் ‘5 வயது சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை’என தீர்ப்பளித்தார்.
இந்த இரு தீர்ப்புகளும் சமூகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பிய நிலையில் அவற்றை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து அவரை மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கு பதில் ஓராண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையையும் கொலிஜியம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது ஓராண்டு பதவிக்காலம் முடிந்தவுடன், அவரை நாக்பூர் அமர்வு நீதிபதியிலிருந்து மாவட்ட நீதிபதியாக பதவி குறைப்பு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘இந்த முடிவு தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக எடுக்கப்பட்டது அல்ல. தீர்ப்பு வழங்கும்போது அவருக்கு பயிற்சியும், அனுபவமும் தேவைப்படுகிறது’ என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.