ஒமைக்ரான் வைரசை லேசாக நினைக்க வேண்டாம்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு…!!
கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து பரவ தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே டெல்டாவாக உருமாற்றம் அடைந்த கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:
பூனம் கேத்ரபால் சிங்
ஒமைக்ரான் வைரஸ் பிற கொரோனா உருமாற்ற வைரஸ்களை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும் என கருதினால் கூட, அதிக அளவில் பரவும் தன்மை இருப்பதால் நமது மருத்துவ கட்டமைப்புக்கு சவால் விடக்கூடியதாக இருக்கும். தடுப்பூசிகள் கூட ஒமைக்ரானுக்கு எதிராக பெரிய அளவில் பயன் தரும் என சொல்ல முடியாது. ஒமைக்ரான் குறித்த தேவையான தரவுகளை உலக சுகாதார அமைப்பு சேகரித்து வருகிறது. இன்னும் ஒருசில வாரங்களில் தான் இந்த வைரஸ் குறித்து முழுமையாக நமக்கு தெரிய வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒமைக்ரான் வைரஸ், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதித்து குணமடைந்தவர்களை கூட மீண்டும் பாதிக்கும் என தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் கூறி வரும் நிலையில், இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து நாடுகளும் ஒமைக்ரான் பரவலை தடுக்க தேவையான ஆரம்பத்திலேயே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பூனம் கேத்ரபால் சிங் எச்சரித்துள்ளார்.