அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5 கோடியாக அதிகரிப்பு..!!
2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவியது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் வைரஸ் பாதிப்பால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் சரியாக ஓராண்டு முன்பு அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் அங்கு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. கொரேனாவை ஒழிக்க தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்தியது.
முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
ஆனால் தற்போது வரை அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அந்த நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
இது அங்கு கொரோனா முழுமையாக ஒழிக்கும் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது. இது ஒரு புறமிருக்க அங்கு ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதே போல் கொரோனாவால் நிகழும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த பலி எண்ணிக்கை 8 லட்சத்து 280 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட தொடங்கிய சமயத்தில் கொரோனா உயிரிழப்பு 3 லட்சமாக இருந்ததும், கடந்த ஓர் ஆண்டில் 5 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.