புதின்-ஜின்பிங் சந்திப்பு காணொலி காட்சி வாயிலாக நடந்தது…!!
மாஸ்கோ : ரஷியா-சீனா இடையிலான உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் ரஷியா-சீனா இடையிலான நட்புறவை வெகுவாக பாராட்டினர். 21 ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் சரியான எடுத்துக்காட்டாக சீனாவும், ரஷியாவும் இருப்பதாக புதின் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “உள்விவகாரங்களில் ஒருவருக்கொருவர் தலையிடாமல் இருத்தல், பரஸ்பர நலன்களுக்கு மதிப்பளித்தல், பகிரப்பட்ட எல்லையை அமைதியின் வளையமாக மாற்றுவதற்கான உறுதிப்பாடு போன்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடுகளுக்கிடையே ஒரு புதிய மாதிரி ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
அதை தொடர்ந்து ஜின்பிங் பேசுகையில் “முக்கிய தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சீனாவின் முயற்சிகளை வலுவாக ஆதரித்தது மற்றும் நமது நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை உறுதியாக எதிர்த்தது ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்றார்.