எனது மகள் ஷீனா போரா உயிருடன் இருக்கிறார் – இந்திராணி சி.பி.ஐ.க்கு பரபரப்பு கடிதம்…!!
மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இருவரும் மறுமணம் செய்தவர்கள். இதில் பீட்டர் முகர்ஜி 2-வது திருமணம் செய்த நிலையில், இந்திராணிக்கு 3-வது திருமணம் ஆகும். இந்திராணி கணவரின் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார்.
இந்திராணிக்கு முதல் கணவர் சித்தார் தாஸ் மூலமாக ஷீனா போரா(வயது23) என்ற மகள் இருந்தார். இந்தநிலையில் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியும், ஷீனா போராவும் காதலித்துள்ளனர். முறை தவறிய இந்த காதலை இந்திராணி முகர்ஜி எதிர்த்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷீனா போரா திடீரென காணாமல் போனார். அவர் படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் இந்திராணி முகர்ஜியின் டிரைவர் ஷியாம்வர் ராய் என்பவரை போலீசார் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் பிடித்து விசாரித்தபோது ஷீனா போரா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது மகளின் காதலை ஏற்க மறுத்த அவரது தாய் இந்திராணி முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோர் உதவியுடன் ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள காட்டில் எரித்து விட்டது தெரியவந்தது.
ஊடக துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் தனது மகளையே கொடூரமாக கொன்ற வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்திராணிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தற்போது மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.க்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் சிறையில் ஒரு பெண் கைதியை சந்தித்தேன். அப்போது அவர் ஷீனா போராவை காஷ்மீரில் சந்தித்ததாக என்னிடம் கூறினார். இது குறித்து விசாரிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இந்திராணி தனது வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நாளான வருகிற 28-ந் தேதி சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்வார் என அவரது வக்கீல் கூறினார்.
இந்திராணி சி.பி.ஐ.க்கு அனுப்பிய கடிதத்தால் இந்த வழக்கில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.