நண்பரை தாக்கியதில் பார்வை பறிபோனது: டிரைவருக்கு ஆயுள் தண்டனை…!!
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் சையத் (வயது29). டிரைவரான இவரது நண்பர் கரண்சந்திரசிங். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி நண்பரிடம் இருந்த ஒயிட்னர் (மை அழிக்கும் திரவம்) தரும்படி கேட்டார். இதற்கு கரண் சந்திரசிங் கொடுத்து உள்ளார். சில மணி நேரம் கழித்து மீண்டும் ஓயிட்னரை தரும்படி கேட்டார். இதற்கு அவர் மறுத்து உள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சையத் தான் வைத்திருந்த கத்தியால் கரண்சந்திர சிங்கை வயிறு, தோள் பட்டை, கண்களில் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கரண் சந்திர சிங் அங்கிருந்து கணேஷ் பண்டல் பகுதிக்கு தப்பி ஓடினார். அங்கு இருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் ஓடி வந்த கரண் சந்திர சிங்கை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சையத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சாக்கிநாக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கரண் சந்திர சிங் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இருப்பினும் கொடூரமான தாக்குதலில் அவரது பார்வை பறிபோனது.
இது குறித்து போலீசார் சையத் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் அவருக்கு எதிரான 8 பேர் சாட்சியம் அளித்தனர். கோர்ட்டில் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் சையத் மீதான குற்றம் நிரூபணமானது.
இதனை தொடர்ந்து கோர்ட்டில் நீதிபதி பாகாலே குற்றவாளியான சையத் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை சேதப்படுத்தியதால் பார்வை இழந்து உள்ளார். அவரது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விட்டார். இதனால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.