வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – அமைச்சர் வாசுதேவ!! (படங்கள்)
வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீர்வழங்கல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்டங்களின் நீர் வழங்கல் வசதிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.12) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது வன்னி மாவட்டத்தில் நீர்வழங்கல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் செயற்திட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாக ஆராயப்பட்டதுடன், சுத்தமான குடிநீரைப் பெறல் மற்றும் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தரைக்கீழ் நீர்வளத்தை பாதுகாப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் இணைத்து வன்னி மாவட்டமாக எமது அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். வன்னி மாவட்டத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் செயற்திட்டம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை மதிப்பீடு செய்ய வந்திருக்கின்றோம். இந்தப் பிரதேசத்தின் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களின் குறைக்கள் நிறைகள் தொடர்பில் உங்களது கருத்துக்களில் இருந்து என்னால் விளங்கிக் கொள்ள கூடியதாக இருந்தது.
இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான், அமைச்சின் உயர் அதிகாரிகள், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், அமைச்சரின் இணைப்பாளர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”