40க்கு பாலியல் தொந்தரவு ; 70க்கு விளக்கமறியல்
நெல்லியடி கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ச்சியாக கொடுத்துவந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
மத்தொணி பகுதியைச் சேர்ந்த முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் குறித்த 40 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகின்றார். அவர் தினந்தோறும் பேருந்து ஏறுவதற்காக வரும் போது மேற்படி முதியவர் வாய் மற்றும் கை சைகைகளை பயன்படுத்தி குறித்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றையதினம் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்த பொழுது , கைகளை பயன்படுத்தி பெண்ணை வெளியில் வருமாறு அழைத்து சைகை மூலம் சில்மிஷம் செய்துள்ளார்.
குறித்த முதியவரின் துன்புறுத்தல் தாங்கமுடியாத நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த பட்டிருந்தார்.
வழக்கினை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அவரின் மனநிலை தொடர்பில் மனநோயியல் வைத்தியரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நெல்லியடி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.