ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத சாதனை- உள்துறை மந்திரி அமித் ஷா பெருமிதம்…!!
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது. நாங்கள் ஓரிரு தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். அந்த முடிவுகள் தவறானதாக இருந்தாலும் எங்கள் நோக்கம் தவறு என விமர்சகர்கள் கூட விமர்சித்தது இல்லை.
எங்கள் அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வளர்ச்சி திட்டங்கள் எதுவும் சென்றடையாத 60 கோடி மக்களுக்கு நாங்கள் வளர்ச்சியை கொண்டு சென்றுள்ளோம். அந்த 60 கோடி மக்களும் இதுவரை வங்கி கணக்கு, மின்சார இணைப்பு, அடிப்படை மருத்துவ வசதி எதுவும் கிடைக்கப்பெறாதவர்கள். மோடி அரசாங்கம் அவர்களுக்கு அனைத்தையும் தந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆளுமையாலும், 130 கோடி மக்களின் பங்களிப்பாலும் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்தது. பொருளாதாரம் அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 155 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளில் நம் நாடு பெரும் மாற்றங்களை அடைந்துள்ளது.
பிரதமர் மோடி
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ எந்த வன்முறையும் இல்லாமல், யாரையும் ரத்தம் சிந்த விடாமல் நாங்கள் நீக்கினோம். நீண்ட காலமாக சிக்கலில் இருந்த ராம ஜென்ம பூமி விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு கண்டோம்.
தீவிர இடதுசாரித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளை கருத்தில் கொண்டு புதிய கல்விக்கொள்கை, நீர்க்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மோடி அரசு கவனம் செலுத்தாத இடங்களே இல்லை. ஏதாவது ஒரு நாடு கொரோனா பெருந்தொற்றுக்கு பின் வலுவான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றால் அது இந்தியா தான்.
ஒரு அரசு ஐம்பது ஆண்டுகளில் 4 அல்லது 5 முக்கிய முடிவுகளை எடுக்கும், ஆனால் மோடி அரசு வெறும் ஏழு ஆண்டுகளில் 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பிரதமர் மோடியின் தொலைக்கு பார்வை தான்.
இவ்வாறு மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.