முதியவர் சிறுநீரகத்தில் 156 கற்கள்… மூன்று மணி நேரத்தில் அகற்றிய மருத்துவர்கள்..!!
கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் 50 வயது முதியவர் ஒருவர் திடீரென கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் லேப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோப்பி துணைக்கொண்டு அவரது சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை அகற்றியுள்ளனர். இந்த எண்ணிக்கை தான் இந்தியாவிலேயே அகற்றப்பட்ட அதிகப்படியான கற்களின் எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக அவரது சிறுநீரகத்தில் இந்த கற்கள் உருவாகி வந்துள்ளதாகவும், இதற்கு முன் வலி எதுவும் இல்லாததால் அவருக்கு கற்கள் இருப்பது தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவரது சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் அகற்றப்பட்டு இப்போது அவர் நலமாகவுள்ளார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.