பள்ளி விழாவில் விளையாட்டு விபரீதமானதால் 5 குழந்தைகள் பலி- பிரதமர் அனுதாபம்…!
ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனியா மாகாணத்தில் டெவன்போர்ட் என்ற பெயரில் ஒரு துறைமுக நகரம் உள்ளது. 30 ஆயிரம் பேர் வசிக்கிற இந்த நகரத்தில் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் நேற்றுமுன்தினம் கல்வி ஆண்டின் கடைசி நாள் என்ற வகையில் ‘பன் டே’ என்ற பெயரில் வேடிக்கை நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘துள்ளல் கோட்டை’ என்று அழைக்கப்படுகிற பிரமாண்ட பலூன் போன்று ஊதப்பட்ட ஒரு கோட்டை அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஏறி குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதத்தில் காற்று மிக வேகமாக வீசியது. இந்த காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த ‘துள்ளல் கோட்டை’ வெடித்தது. இதனால் அதில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அலறியவாறு தரையில் வந்து விழுந்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகள் சுமார் 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த கோரச்சம்பவத்தில் 5 சின்னஞ்சிறு குழந்தைகள் பலியானார்கள். 4 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து அந்தக்குழந்தைகளுக்கு முதலுதவி செய்தார்கள். அதன் பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றிய தகவல்கள், அந்த நகரத்தில் காட்டுத்தீ போல பரவியது. அந்தப்பள்ளியில் படித்து வந்த குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் நிலையை அறியவும், அவர்களை அழைத்து வரவும் பள்ளியை நோக்கி படையெடுத்தனர்.
இந்த துயர சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘இந்த விபத்து நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. சிறு குழந்தைகள் ஒரு வேடிக்கையான நாளில் கொண்டாட்டத்தில் இருந்தபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்து சோகமாக மாற்றி விட்டது’’ என தெரிவித்தார்.
டாஸ்மேனியா மாகாண பிரதமர் பீட்டர் குட்வைன் இதுபற்றி கூறும்போது, ‘‘இந்த சம்பவம் ஒரு தொடக்கப்பள்ளியில் நடந்துள்ளது. இதனால் இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒவ்வொருவரின் எண்ணமும் இணைந்துள்ளது. வெளிப்படையாக, காயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோருடன் இணைந்து இருக்கிறது’’ என குறிப்பிட்டார்.
இந்த சம்பவம், அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் இதுபோன்ற சம்பவம் பல நாடுகளில் அரங்கேறி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. சீனாவில் 2019-ல் நடந்த ஒரு சம்பவத்தில் இதே போன்று 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தில் ஒரு பெண் குழந்தை பலியானது.