கிராமத்திற்குள் நுழைந்து மக்களை விரட்டிய யானைக் கூட்டம்: 71 வயது மூதாட்டி யானை மிதித்து உயிரிழப்பு…!!
சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் மனித-யானை மோதல் அதிகம் பதிவாகி வருகின்றன. தற்போது மத்திய சத்தீஸ்கர் பகுதிகளிலும் இது தொடங்கி உள்ளது.
அம்மாநிலத்தின் கோர்பா மாவட்ட வனப்பகுதியின் அருகே உள்ள தும்பாரா கிராமத்திற்குள், அதிகாலையில் திடீரென 43 காட்டு யானைகள் புகுந்தன.
யானைக் கூட்டம்
பிளிறிக் கொண்டு காட்டு யானைகள் கூட்டமாக வருவதை அறிந்த மக்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள தலைதெறிக்க ஓடினர். அப்போது 71 வயது மூதாட்டி புத் குன்வாரியா ஓட முடியாமல் தவித்தார். அவரது மகன் அந்த மூதாட்டியை வைக்கோல் குவியலுக்கு அடியில் கிடத்தி மறைக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த யானை மிதித்ததால் அந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். நிவாரணமாக அவரது குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5.75 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.