வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று- கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!
தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பரவிய ஒமைக்ரான் தொற்று கடந்த 12-ந்தேதி கேரளா மாநிலத்திலும் கண்டறியப்பட்டது.
இங்கிலாந்தில் இருந்து வந்த வாலிபர், அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயாருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த வாலிபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த மாநில சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் காங்கோ நாட்டில் இருந்து கேரளா வந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5 ஆக இருந்தது.
இந்நிலையில் வளைகுடா நாட்டில் இருந்து 68 வயது முதியவரும், அவரது மனைவியும் கொச்சி வந்தனர். இவர்களின் சளி மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டது. நேற்று இதன் முடிவுகள் வந்தன.
இதில் இருவருக்குமே ஒமைக்ரான் பாதிப்பு உறுதி ஆனது. இதையடுத்து கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதுபற்றி மாநில சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-
ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர் 14 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இது தவிர அதிக பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருவோரும் கட்டாய தனிமையில் இருக்க இப்போது அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் ஒமைக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.