த.தே.கூ பதிவு செய்யாமல் இருக்க முடியாது: டெலோ !!
இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்திற்குள் இல்லாமல் இரு இணைத்தலைமை உருவாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இரண்டு பொலிஸ் நிலையம் ஊடாக வழக்குகள் பொத்துவில் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது. பொத்துவில் பொலிஸாரும் திருக்கோவில் பொலிஸாரும் இரண்டு வேறுபட்ட வழக்குகளை போட்டிருந்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கான வழக்காக அது தெரியவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியல் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பொலிஸ் நிலையத்திலும் அதேபெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் அங்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் அவர்களது உரிமைகளை கேட்டுபோராடும்போது அவர்களை நசுக்குவதற்காக போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே சிலரது பெயர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்படுகின்றது. சிறுபான்மை மக்களை நீதித்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
சட்டவாக்கத்துறை ஒழுங்கில்லையென்பது சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான சபை அமர்வு 11ஆம் திகதி கூடுவது என தீர்மானித்திருந்தும் ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி பாராளுமன்ற கூட்டத்தொடரை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.இதன் ஊடாக சட்டவாக்கத்துறையும் சீரில்லாமல் உள்ள நிலையே உள்ளது.
நிர்வாகத்துறையினை எடுத்துக்கொண்டாலும் இந்த நாட்டில் மிக மோசமான நிர்வாகம் இருக்கின்றது என்பது அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையில் ஆணையாளர் நியமனங்களில் இருந்தே நிர்வாகத்துறை சீர்கேடான நிலையிலிருக்கின்றது என்பது இதன்மூலம் வெளிப்படையாக தெரிகின்றது.
ஜனாதிபதியின் செயலாளரால் தான் இந்த நாட்டில் நிர்வாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஷ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்த வரை 20வருடங்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் பதியப்படாத நிலையிலுள்ள ஒரு அரசியல் கூட்டாகவே இருக்கின்றது. இது மிகவும் துரதிர்ஸ்டவசமானது.
மலையக கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முன்னணியை உருவாக்கியிருந்தார்கள். மூன்று வருடத்துக்குள்ளே அவர்கள் அதனை ஒரு அரசியல்கட்சியாக பதிவுசெய்துள்ளார்கள்.
அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் ஐயா தொடர்ச்சியாக இருந்துவருகின்றார். தற்போது பத்திரிகை ஊடாக அறியக்கூடியதாகவுள்ளது சம்பந்தர் ஐயா அவர்கள் திருகோணமலை பாராளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்யப்போவதாக அறியக்கூடியதாகவுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியாவிட்டாலும் அப்படியொரு நிலைமையேற்பட்டால் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இருப்பவர் சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற உறுப்பினர் பதவி வலிதற்றதாகும்போது தலைமை பொறுப்பையும் இழப்பார்.
இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து விலத்தவேண்டிய தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வகிப்பவர் பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்ற நியதியில்லை.
அவர் விரும்பி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவியை துறப்பாரானால் தமிழ் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அங்கம் வகிகும் கட்சி என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது. இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாமலிருக்கமுடியாது என்றார்.