எந்த தப்பும் செய்யாமல் 19 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்த வாலிபர்..!!
ஒடிசா மாநிலம் மயூர் பனாஜ் மாவட்டம் பலா ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் கபில்சிந்து.
கடந்த 2003-ம் ஆண்டு இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கபில் சிந்துவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
2005-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்சு கோர்ட்டு கபில் சிந்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் ஒடிசா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தனிக்குழு அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை விசாரித்த அதிகாரிகள் 32 பக்க அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் கபில் சிந்துவுக்கு 3 பேர் கொலையில் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் ஐகோர்ட்டு கபில் சிந்துவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பேரில் செய்யாத குற்றத்திற்காக 19 ஆண்டு ஜெயில் வாசம் அனுபவித்த கபில்சிந்து விடுதலை செய்யப்பட்டார்.
இது பற்றி அவர் கூறும் போது, இப்போதுதான் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எந்த குற்றமும் செய்யவில்லை. இதற்காக வீனாக 19 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து விட்டேன்.
இதனால் எனது குடும்பத்தினர் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். ஆனால் நான் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்ய உள்ளேன் என்று கூறினார்.