கொரோனா பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம்: பைசர் நிறுவனம் தகவல்…!!
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரசால் அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 93 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதையடுத்து கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் குறைந்த அளவிலேயே செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றான பைசர் தெரிவித்துள்ளது.
இது குறித்து பைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டோல்ஸ்டன் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் சில பிராந்தியங்களில் கொரோனா நோய் தொற்று நிலை தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். 2024-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவும் என்று கணித்திருக்கிறோம்.
இது எப்படி சரியாக நிகழும் என்பது நோயின் பரிமாணம், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் எவ்வாறு திறம்பட பயன்படுத்தப்படுகிறது, தடுப்பூசி குறைவாக உள்ள இடங்களுக்கு சமமான தடுப்பூசி வினியோகம் ஆகியவற்றை பொறுத்து அமையும்.
புதிய வைரஸ் மாறுபாடுகள் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து நிலைக்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.