;
Athirady Tamil News

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி! சட்டத்தை கையிலெடுத்த பொதுமக்கள்!

0

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பங்காதெனிய கோட்டப்பிட்டி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பங்கதெனிய , கருக்குப்பனையைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரை சொகுசு தனியார் பஸ் ஒன்றும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் பெருந்திரளானோர் ஒன்றுகூடியமையால் அமைதியின்மை ஏற்பட்டது.

தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருடன் அங்கு வந்த இளைஞர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது அங்கு வாளுடன் வருகை தந்த நபர் ஒருவர் , அங்கிருந்த ஒருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, நிலைமை மேலும் மோசமடைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆராச்சிக்கட்டுப் பொலிஸாருக்கு மேலதிகமாக , பல்லம, மாரவில, முந்தல், சிலாபம், மாதம்பை, மதுரங்குளி , உடப்பு உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும் , விஷேட அதிரடிப் படையினரும் , இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.