சபரிமலையில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி…!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனால் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 38 கி.மீ தொலைவு உள்ள பெருவழிபாதை திறக்கப்பட உள்ளது.
சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45,000-ல் இருந்து 60,000 ஆக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.