யாழ்.மணிக்கூட்டு கோபுர மணிக்கூட்டுகள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!! (படங்கள்)
யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள மணிக்கூடுகள் நீண்ட காலத்திற்கு பின்னர் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன.
மிக விரைவில் ” மணிக்கூட்டுக்கோபுர மணியோசை மீண்டும் பாரம்பரியமிக்க யாழ் வாத்தியத்தின் நாத ஒலியாக யாழ்.நகர் எங்கும் ஒலிக்கும்” என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நகர் மத்தியில் காணப்படும் குறித்த மணிக்கூட்டு கோபுரம், 1875இல் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் பிரித்தானிய இலங்கைக்கு வருகை புரிந்ததை நினைவுகூரும் வகையில் இது கட்டப்பட்டது.
1980களின் பிற்பகுதியில் உள்நாட்டுப் போரினால் கோபுரம் மோசமாக சேதமடைந்தது. வேல்சு இளவரசர் சார்லசு 1998இல் இலங்கைக்கு வந்தபோது, கோபுரத்தை மீட்டெடுப்பதில் பிரிட்டன் சார்பில் நிதியுதவியை வழங்கினார்.
பிரிட்ட்டன் அரசு ஒரு மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது. புதுப்பிக்கப்பட்ட கோபுரம் பிரிட்டன் உயர் ஸ்தானிகர் லிண்டா டஃபீல்டால் 19 ஜூன் 2002 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் காலத்திற்கு காலம் மணிக்கூட்டு கோபுர மணிக்கூடுகள் பழுதடைந்து வந்த நிலையில் , தற்போது யாழ்.மாநகர சபையினால் , தனியார் நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்பில் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு , அழகூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”