மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு!!
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (20) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவை பத்திரத்தினூடாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 2020 மார்ச் 1 ஆம் திகதி முதல் 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த மின்சார கட்டணச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பதற்கும், அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 36 சம தவணைகளில் அனைத்து நிலுவைத் தவணைகளையும் செலுத்துவதற்கும், சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினூடாக முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த சலுகைக் காலத்தில் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது என்றும், கட்டணம் செலுத்தப்படாத மின் பட்டியலுக்கு தாமதக் கட்டணம் அறவிடக் கூடாது. அதிக தேவை உள்ள காலங்களில் ஹோட்டல் துறையில் மின்சாரத்தின் அலகுக்கான விலையை ஏனைய தொழில்களுக்கு சமனானதாக மாற்றியமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சுற்றுலாத் துறை தொடர்பான சேவை வழங்குனர்களின் பொருளாதார நிலை இன்னும் முழுமையாக முன்னேறவில்லை. ஹோட்டல்கள் தொடர்ந்து இயங்குவதற்கு மின்சாரத்தின் பயன்பாடு இன்றியமையாதது, இந்த நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிவாரணம் வழங்கியது. சுற்றுலாத்துறை மீளும் வரையில் இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாகவே இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.