வேகமாக பரவும் ஒமைக்ரான் – நெதர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்திலும் பொதுமுடக்கம்?…!!
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்ட றியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், நைஜிரீயா, பிரான்ஸ் உள்பட 89 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது.
முதலில் சாதாரணமாக தெரிந்த ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களில் இதன் தாக்கம் உச்சத்தை தொட்டு விட்டது. உயிரிழப்பும் கூடுதலாகி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன.
நெதர்லாந்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது.
இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கி விட்டதால் அங்கும் பொது முடக்கத்தை அமல்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.
இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வர இருக்கின்றன. இந்த விழாக்களின் போது ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள்.
இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதனால் இந்த கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.
இங்கிலாந்தில் பொது ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஜாவித் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இத்தாலி நாட்டில் பொதுஇடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பொதுமக்கள் செல்ல இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
விமான நிலையங்கள் அனைத்திலும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் வருகிறார்கள்.