’நிபந்தனையிலேயே நட்டஈட்டை செலுத்த இணக்கம்’ !!
இலங்கைக்கு தரம் மிக்க உரத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் கீழேயே, சீன உர நிறுவனத்துக்கான நட்டஈட்டை செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், சட்டமா அதிபரின் தெளிவுபடுத்தல் மற்றும் அவரின் வழிகாட்டலின் கீழேயே இந்த நட்டஈடு செலுத்தும் தீர்மானத்தை அமைச்சரவை எடுத்தது என தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரதும் காரணங்களை ஆராய்ந்த பின்னர் தற்போது இலங்கையால் செலுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள 6.7 டொலர் மில்லியனானது, மீண்டும் இலங்கைக்கு தரத்துடன் கூடிய உரத்தை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைய தான் இந்த நட்டஈடு தொகை செலுத்தப்படவுள்ளது என்றார்.
அத்துடன், மீண்டும் சீனா அனுப்பும் உரத்துக்கு பணம் செலுத்தும் தேவையில்லை என தெரிவித்த அவர், தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் 5 மில்லியன் டொலர் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அது இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதனை வைப்பீடாக வைத்துக்கொண்டே கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. எனவே இலங்கைக்கு மீண்டும் தரமிக்க உரம் இறக்குமதி செய்யப்படும் போது தான் அந்த வைப்பை விடுவிப்போம் என்றார்.