யாழ் மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள் வீடியோ)
கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் ஓர் அங்கமாக, யாழ் மாவட்டத்தில் கிராமத்துடனான உரையாடல் மக்கள் சந்திப்புகளில் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பான முன்னுரிமைப்படுத்தல் கலந்துரையாடல் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கிராமத்துடனான உரையாடல் சந்திப்புகள், மற்றும் பிரதேச மட்ட கலந்துரையாடல்களில் சந்தித்த சுய தொழில் முயற்சியாளர்கள் பலரது வெற்றிக்கதைகள் பெரும் உற்சாகத்தை வழங்குகிறது என அங்கஜன் இராமநாதன் தெரிவீத்துள்ளார்.
அத்தோடு வாழ்வாதாரத்தை மையப்படுத்திய அபிவிருத்திகளை மேற்கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள அங்கஜன் இராமநாதன் வியாபார திட்டங்களை தொழில் முனைவோருக்கு வழங்குவதில் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”