கோவிஷீல்டு தடுப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
அந்த ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 2 டோஸ் செலுத்தி முடித்த 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.
இதே தடுப்பூசிதான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது.
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேரிடமும், பிரேசிலில் 4 கோடியே 20 லட்சம் பேரிடமும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்ட பின்னர் 2 வாரங்களில் ஒப்பிடும்போது 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது, இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.