இந்திய குடியுரிமை வேண்டி 7000 பாகிஸ்தானியர்கள் விண்ணப்பம் – மத்திய அரசு தகவல்…!!
இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் குறித்து கேட்டு கேரள எம்பி அப்துல் வாகாப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நித்தியானந்த் ராய் கூறியதாவது:-
கடந்த டிசம்பர் 14-ம் தேதி வரை 7,306 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். மேலும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து 1152 விண்ணப்பங்கள் , அமெரிக்கா மற்றும் இலங்கையில் இருந்து 223 விண்ணப்பங்கள், நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 161 விண்ணப்பங்கள், சீனாவில் இருந்து 10 விண்ணப்பங்கள், நாடற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள பிரிவினர்களிடமிருந்து 128 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் சிறுபான்மையராக இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்களிடமிருந்து இந்திய குடியுரிமை வேண்டி 2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 8,244 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 3,117 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 7 வருடங்களில் 1,11,287 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
இவ்வாறு நித்தியானந்த் ராய் கூறினார்.