24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா சாதனை…!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரலே’ ஏவுகணையின் முதலாவது சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. ஒடிசா மாநிலம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடந்தது.
இந்த உந்துவிசை ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டது.
இந்த ‘பிரலே’ ஏவுகணை எதிர்பார்க்கப்பட்ட அனைத்து சோதனை முடிவுகளையும் திருப்திகரமாக வெளிப்படுத்தியது. குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் அதே ஏவுகணை சோதனை வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட வரம்பில், மாறுபட்ட வடிவமைப்புடன் இன்று சோதனை நடத்தப்பட்டது.
இதன்மூலம் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்த நாட்களில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணையை இந்தியா முதன்முறையாக வெற்றிகரமாக சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.