தூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)
தூக்கம் கெடுக்கும் பல்வேறு நிகழ்வுகள் பராசோம்னியா (Parasomnia) என அழைக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. கனவில்லா தூக்கத்தில் ஏற்படும் தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும் கோளாறுகள் இவை…தூக்கத்தில் நடப்பது (Somnabulism-Sleep walking) இக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்கி, ஒன்று இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் இப்படி செய்வது அவர்களுக்கே தெரியாது.
பொதுவாக, பெரிய குழந்தைகளையும், டீனேஜ் வயதினரையும் அதிகமாக இக்கோளாறு பாதிக்கிறது (10-12 வயதினர்). பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. சில நேரங்களில் நடக்கும் போது சில கெட்ட வார்த்தைகளை உளறுவதும் உண்டு. சில நேரங்களில், பெரியவர் ஆன பிறகும் கூட இக்கோளாறு நிலைத்திருக்கக்கூடும். பாதிக்கப்பட்ட குழந்தை காயப்படும் வாய்ப்பு இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது அவசியம். இதனால், குடும்பத்தினரின் தூக்கமும் நிம்மதியும் கெடக்கூடும். முதிராத மத்திய நரம்பு மண்டலத்தினாலும், உடல் அசதியினாலும் இக்கோளாறு ஏற்படக்கூடும்.
தூக்கத்தில் பயங்கரம் (Sleep Terrors)
குழந்தை உறங்கி, பொதுவாக 4 மணி நேரத்துக்குள் இக்கோளாறின் அறிகுறிகள் ஏற்படும். திடீரென தூக்கத்திலிருந்து, குழந்தை அதிக இதய படபடப்பு மற்றும் விரிந்த கண்களுடன் விழித்தெழுந்து, குதித்துக் கொண்டு பயங்கர பீதி மற்றும் குழப்பத்தில், கைகால்களை அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிடும். (சில நேரத்தில், சம்பந்தமின்றி சில வார்த்தைகளை பேசவும் செய்யும்). இத்தருணத்தில், அவா்களை ஆறுதல் படுத்தினாலும், அது பயனளிக்காது.
பொதுவாக, அவர்களே திரும்பியும் இயல்பாக தூக்கத்துக்குச் சென்று விடுவது வழக்கம். அடுத்த நாள் காலையில், முன்னிரவு நடந்த சம்பவம் எதுவும் அவர்களுக்கு நினைவில் இருக்காது. இக்கோளாறு பொதுவாக 18 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை பாதிக்கிறது. இதனால், குழந்தைக்கு எந்த தீங்கும் ஏற்படாது. இருப்பினும், இவ்வகை விழிப்பின் போது, குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படாதவாறு, பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் இம்மாதிரி நடந்து கொள்ளும் போது, அவர்களை விழிக்க வைக்கவோ/சமாதானப்படுத்தவோ கூடாது (ஏனெனில், அவர்கள் உண்மையில், உறங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்). கனவுத் தூக்கத்தில் ஏற்படும் தூக்க விழிப்புக் கோளாறுகள் இவை…
கெட்ட கனவு கோளாறு (Night Mare)
பொதுவாக எல்லாக் குழந்தைகளுமே கெட்ட கனவு கண்டு விழித்து எழுவதை பரவலாக பார்க்க முடியும். குழந்தைக்கு 3 வயது ஆகும் போது, தூக்கத்தில் வரும் கனவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாது. மேலும், 3-6 வயதில் பய உணர்வு அதிகம் இருக்கும் தருணத்தில், அன்றாடப் பிரச்னைகள் (சண்டை, படிப்புச் சுமை, பிரிவு குறித்த பதற்றம் போன்றவை) கெட்ட கனவை ஏற்படுத்தலாம். இம்மாதிரியான விழித்தெழுதல், பொதுவாக குழந்தை கனவுக் காணும் போது ஏற்படுவதால், அடுத்த நாள் குழந்தைக்கு நினைவு இருக்கலாம்.
மேலும், இவ்வாறு பயந்து விழித்து அழும்போது, பெற்றோர்கள் சமாதானப்படுத்தினால், குழந்தைகள் திரும்பவும் தூங்கி விடுவது வழக்கம் (இவர்களின் கனவுகள் பொதுவாக அசுரன், பேய், மிருகம், கெட்ட மனிதர்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருக்கும்…). இவர்களின் கனவு, ஆபத்து, பயமுறுத்தும் சூழலைக் குறித்து இருக்கும். குழந்தை வளர வளர, இக்கோளாறு குறைந்து விடுவது வழக்கம். கெட்ட கனவு காணும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால், அவர்களின் தூக்கம் கெட்டு, குழப்பம், சந்தேகம், கோபம், பீதி, பதற்றம், மற்றவருடன் சண்டை, மன உளைச்சல் போன்றவையும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தூக்கத்தில் ஏற்படும் நடத்தைக் கோளாறு (Rapid Eye Movement Sleep Behavior Disorder)
பொதுவாக ஆழ்ந்த தூக்கத்தின் போதுதான் கனவு வரும். அப்போது, நம் உடல் தசைகள் எல்லாம் நகர முடியாமல் இருப்பது சகஜம். இவ்வகைக் கோளாறு உள்ளவர்களுக்கு, அங்ஙனம் தசைகள் செயல் இழக்காமல் வேலை செய்யும். ஆகவே, இவர்கள் கனவில் வருவதை நிஜத்தில் செய்வார்கள். கனவில் வன்முறை குறித்த விஷயங்கள்தான் அதிகம் வரும்
என்பதால், இவர்கள் செயல்பாட்டை சமாளிப்பது கடினம். இது அதிகம் ஆண்களிடம் காணப்படுகிறது. குழந்தைகளிடத்தில் காணப்படுவது அரிது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விழித்தெழுந்து பேசுவது, கத்துவது. குதிப்பது, உதைப்பது போன்ற செயல்களில் நிதானமிழந்து ஈடுபடுவது வழக்கம். இதனால், இவர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் காயம் ஏற்படுவது உண்டு. தூக்கத்தில் இப்படி நடந்துகொள்வதற்கு இவர்களின் பொதுவான குணத்துக்கும் சம்பந்தம் இருக்காது.
அமைதியற்ற கால்கள் நோய் (Restless Legs Syndrome)
பொதுவாக 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கோளாறு ஏற்படுகிறது. இது நரம்பு சம்பந்தப்பட்ட தூக்கக் கோளாறு. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களில் ஏதோ ஊர்வது/ படர்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் இவர்கள் கட்டாயத்தின் பேரில் கால்களை அசைத்துக்கொண்டே இருப்பார்கள். சில நேரங்களில், கையிலும் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். இது முக்கியமாக மரபணு காரணத்தால் ஏற்படலாம். இவர்களுக்கு தூக்கம் வருவதே கஷ்டம் என்பதால், பகல் வேளைகளில் எரிச்சலுடனும் சோர்வாகவும் காணப்படுவார்கள். மேலும், ஏடி.எச்.டி. மற்றும் மனச்சோர்வு போன்ற வேறு மனநலப்பிரச்னையும் இக்கோளாறுடன் அதிகம் காணப்படுகிறது.
பல்வேறு உறக்கக் கோளாறுகள் மற்றும் அவற்றின் முக்கிய அறிகுறிகள் குறித்து அறிந்தோம். இப்போது, தூக்கக் கோளாறின் காரணிகள் மற்றும் சிகிச்சையை குறித்துப் பார்ப்போம்.
காரணி மற்றும் சிகிச்சை
பெற்றோரின் துணை இன்றி தூங்கி பழக்கமில்லாதது, சரியான தூக்க பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது, வேறு மருத்துவ மற்றும் உளவியல் காரணங்களாலும் தூக்கக் கோளாறுகள் ஏற்படலாம். மனதைப் பாதிக்கும் நிகழ்வுகளும் (நோய், பிரிவு) அல்லது தினசரி மன உளைச்சல் தரும் விஷயங்கள் போன்றவை தூக்க-விழிப்புக் கோளாறு உருவாவதற்கு
காரணியாக அமையலாம்.
ஏற்கெனவே பார்த்த பல்வேறு தூக்கக் கோளாறுகளின் அறிகுறிகள், தங்கள் குழந்தைக்கு இருப்பது தெரிந்தால், உடனே மருத்துவரையோ, உளவியல் நிபுணரையோ சந்தித்து தீர்வு காண்பது அவசியம். குழந்தையின் தூங்கும் பழக்கத்தைக் குறித்து பல விஷயங்களை (Sleep diary) தெரிந்து கொண்டப் பின்னர், சில ஆய்வுகளையும் (Polysomnogram) மேற்கொண்ட பின், எவ்வகை உறக்கக் கோளாறு எனக் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு உளவியல்-சார் சிகிச்சை மற்றும் மருந்துகள் அல்லது இரண்டும் சேர்ந்தும் சிகிச்சையாக அளிக்கப்படும். அதற்கு முன், இவ்வகை அறிகுறிகள், வேறு ஏதேனும் மனநல/உடல்நல பிரச்னையின் காரணமாக ஏற்பட்டுள்ளதா என்பதும் தெளிவு செய்யப்படும்.
ஆலோசனை மூலம், குழந்தைக்கு ஏன் இந்தப்பிரசினை ஏற்பட்டுள்ளது என கண்டறியப்படும். அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (Cognitive-behavior therapy) மூலம், குழந்தையின் உணர்ச்சி ரீதியான பிரச்னைகள் மற்றும் தூக்கத்தில் பற்களைக் கடிப்பது (Bruxism) போன்ற நடத்தைகளும் சரி செய்யப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
தூங்கும் நேரத்தை சிறப்பான நேரமாக ஆக்க வேண்டும். குழந்தை பெற்றோர் இருவருக்கும் ஆறுதலளிக்கும் வண்ணம் பேசும் சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு அப்படியே தூங்கிவிடலாம்.
குழந்தையின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, எப்போது உறக்கம் நன்றாக வருகிறது என்பதைப் பார்த்து, சற்று முன்னதாகவே அவர்களை படுக்கச் செல்ல தயார் செய்யலாம்.
மங்கலான வெளிச்சம் மற்றும் மிதமான வெப்பம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே குறிப்பிட்ட நேரத்தில்தான் எந்நாளும் தூங்க வேண்டும், விழித்தெழ வேண்டும் என ஒரு நேரத்தைக் குறித்து, அதன்படி தூங்கவும் சொல்லவும். விடுமுறை நாட்களுக்கும் அதற்கென நேரம் குறிப்பது நல்லது. இப்படிச் செய்தால், அதுவே, காலப்போக்கில் அவர்களுக்குப் பழகி விடும்.
குழந்தைகள் களைப்படையும் வண்ணம், அவர்களின் வயதுக்கேற்றவாறு விளையாட்டில் ஈடுபடுத்தலாம் (குறைந்தது 30-60 நிமிடம் ஒரு நாளைக்கு விளையாட வேண்டும்).
குழந்தைக்கு தூங்குவதற்கு ஓரிரு மணி நேரம் முன்னரே சாப்பிட வைத்து, தண்ணீரும் கொடுத்து விட வேண்டும். சிறுநீர் கழித்து விட்ட பின்பே படுக்கைக்கு அனுப்ப வேண்டும். குழந்தையிடம், பகலில் பள்ளியில் நடந்ததைப் பற்றி பேச சந்தர்ப்பம் கொடுப்பது முக்கியம். இப்போதைய பிஸியான வாழ்க்கையில், பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இரவுநேர ஷிஃப்ட் வேலையினால், ஒரு பெற்றோரை மட்டுமே குழந்தை பார்க்கும் நிலையும் உண்டு.
சிலநேரங்களில், அதுவும் இல்லாமல் போய்விடும் பரிதாப நிலையும் ஏற்பட்டு விடுகிறது. குறைந்த அளவு நேரமாவது ஒதுக்கி பேச வாய்ப்பளித்தால்தான், அவர்களைப் பாதித்த விஷயங்களை மெல்ல பகிர்ந்து கொள்வார்கள். இதனால் பெற்றோர்-பிள்ளை உறவும் மேம்படும். பிரச்னையை வெளியே சொல்லி விட்டதும், அவர்களின் மனம் லேசாகி எந்தத் தொந்தரவும் (கெட்ட கனவு) இன்றி தூங்கி விடுவார்கள்.
என்ன செய்யக் கூடாது?
படுக்கைக்குச் செல்லும் போது, கையில் எவ்வித மின்னணு கருவிகளையும் எடுத்துச் செல்ல கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது (எ.டு. தொலைக்காட்சி, கணினி, செல்போன்).
பகலில் குழந்தை தூங்குவதை 6 வயதிற்கு மேல் அனுமதிக்க வேண்டாம். தூங்குவதற்கு ஓரிரு மணிநேரம் முன் சர்க்கரை கலந்த பால், ஜூஸ் போன்றவை கொடுக்கக் கூடாது. ஏனெனில், சர்க்கரை செயல்பாட்டை அதிகரிப்பதோடு, பல் சொத்தையையும் ஏற்படுத்தி விடக்கூடும். சாக்லெட், கூல்ட்ரிங்ஸ், காபி போன்ற பானங்களையும் அறவே தவிர்க்க
வேண்டும்.
நிறைய விளையாட்டுப் பொருட்களை படுக்கையில் வைப்பதைத் தவிர்க்கவும். அதைப் பார்க்கும் போது குழந்தையின் செயல்பாடு அதிகரிக்கவே செய்யும். ஒன்றிரண்டு முக்கிய விளையாட்டுப் பொருட்கள்/ பொம்மைகள் – மென்மையாக கட்டிப்பிடித்துக் கொள்ள மட்டும் இருக்கலாம்.
தூங்குவது என்பது ஒரு சந்தோஷ அனுபவமாக இருக்க வேண்டும். ஒருபோதும் குழந்தையை தண்டிப்பதற்காக, தூங்க அனுப்ப வேண்டாம். அது தூக்கத்தைக் குறித்த பயத்தையும் கசப்புணர்வையும் ஏற்படுத்திவிடக்கூடும்.
தூங்கும் முன் குழந்தையை திட்டவோ, அடிக்கவோ கூடாது. அப்படி செய்திருந்தால், சமாதானப்படுத்தியப் பின்னரே தூங்க வைப்பது நலம். இப்படி சரியான வழிமுறைகளை பின்பற்றினால், குழந்தைக்கும், டீனேஜருக்கும் தூக்க-விழிப்புக் கோளாறுகள் வராமல் தடுக்க முடியும். அதன் மூலம் நீங்களும், உங்கள் குழந்தைகளும், நல்ல மன/உடல் ஆரோக்கியத்துடன் திகழலாம்!
பெற்றோருக்கு டிப்ஸ்
நீங்களும் உங்கள் குழந்தைகளும் நன்றாக உறங்க…
இப்போதைய இன்டர்நெட், ஐ-பேட், செல்போன் யுகத்தில், குழந்தைகள், டீனேஜரை சரியான தூக்கப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவது ஒரு சவாலாகவே அமைகிறது. நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும் பழக்கவழக்கத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது மிகமிக முக்கியம்.
இந்த விஷயத்தில்தான் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் அதிக சண்டை ஏற்படுகிறது. குழந்தைக்கு 6 மாதங்கள் ஆனது முதல், அது தானாகவே தூங்க பழக வைப்பது அவசியம் மட்டுமல்ல… அது வளர்க்கப்பட வேண்டிய திறனும் கூட! பெற்றோர் அவர்களுக்கு செல்லம் கொடுத்து, பக்கத்தில் படுத்து தூங்க வைப்பது என்பது இருவருக்குமே நல்லதல்ல. சரியான சூழ்நிலை அமைத்துக் கொடுத்தால், குழந்தைகள், களைப்பாக இருக்கும்போது இரவில் தானாகவே தூங்கிவிடுவார்கள். இரவில் விழித்தாலும், அவர்கள் தாமாகவே திரும்ப உறங்க கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம்.