அச்சுறுத்தும் ஒமைக்ரான்… அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி…!!
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், ஒமைக்ரான் தொற்றுநோயின் தற்போதைய நிலவரம், மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
16 மாநிலங்களில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரசால் இதுவரை 236 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கொரோனா வைரசின் ஒமைக்ரான் மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்றும், வரும் பண்டிகை காலத்தையொட்டி உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.