ஒமைக்ரான் பரவல் எதிரொலி – ம.பி.யில் இரவுநேர ஊரடங்கு அமல்…!!
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் கடந்த 2-ம் தேதி நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று தற்போது 250-ஐ தாண்டியுள்ளது.
டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இரவுநேர ஊரடங்கு இரவு 11 மணிக்கு அமலானது. இது காலை 5 மணி வரை நீடிக்கிறது.